ஆழிப்பேரலையில் நான் [ My TSUNAMI Experience ]

அன்று ஒரு அழகான ஞாயிற்று கிழமை. இயேசு கிருஸ்துவின் பிறந்தநாளை உலகம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி முடித்த அடுத்த நாள்.

கோழி கூவும் முன்பாகவே வரும் விசை படகின் ஓசை.
இரவிலும் தூங்காத கடலின் அலை ஓசை.
மார்கழி குளிரை சற்றும் பொருட்படுத்தாமல்.
மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள்.
பள்ளி வாசலின் தொழுகை ஓசை.
கோவிலின் கர்நாடக பாடல் இசை.
எனவாக
ஒரு மீனவ கிராமத்திற்கு உரிய அத்தனை அழகுடனும் விடிந்தது காலை பொழுது.
பள்ளி விடுமுறை நாள் என்பதால் நல்ல தூக்கத்திற்கு பிறகு எழுந்த நான் தொலைக்காட்சியை காண ஆரம்பித்தேன். மணி 8.50க்கு காலை சிற்றுண்டி சாப்பிட தயாராக இருந்தது. சன் தொலைக்காட்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் முடிவாக கங்கை அமரனும் திண்டுக்கல் லியோனியும் இணைந்து பாடிக்கொண்டிருந்தனர். எங்கள் வீட்டில் என்னோடு அண்ணன், தம்பி, தங்கை, சித்தப்பா மற்றும் நண்பர்கள் என அனைவரும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.
திடீர் என வீதியில் ஒர் அலறல் சத்தம் கேட்டது. அது யாரும் அல்ல கடற்கரைக்கு மீன் வாங்க சென்ற என் தாயின் குரல்தான் அது. ” கடல் பொங்கி வருது எல்லாரும் ஓடுங்க ! எல்லாரும் ஓடுங்க ! ! ” என கிராமத்திற்கே செந்தமான குரலில் கத்திக்கொண்டு ஓடி வந்தாள்.
அதிர்ந்துபோன நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம். மாடிக்கு ஏறிய அண்ணனுடன் நானும் ஓடினேன். இரண்டாவது மாடியின் அருகே சென்றபோது 10 அடி உயரத்தில் ஆக்ரோசத்துடன் வந்த கடல் நீரை பார்த்ததும் ” இறங்கி ஓடு, இறங்கி ஓடு “ என்று அலறினார். நான் எதையும் பார்க்கவும் இல்லை, பார்க்க நேரமும் இல்லை. இறங்கி ஓடினேன் ஆனால் எங்கே ஓடிவது?? நேராக மேற்கு நோக்கி ஓடியிருக்க வேண்டும். ஆனால் அந்த ஒரு கனத்தில் சிந்திக்க முடியவில்லை. கிராமத்தின் பிரதான சாலையில் நானும் என் நண்பன் ராஜாவும் ஓடினோம். [ ராஜா என் வயதே உடையவன். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவன். கடந்த ஒரு வருடமாய் எங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்ந்தவன். ] நான் மேற்கு நோக்கி திரும்பும் சாலையை அடைவதற்கு முன்பாகவே ஆழிப்பேரலை தாக்கியது. முட்டி அளவு தண்ணிரை பொருட்படுத்தாமல் அவசரத்தில் குறுக்கே புகுந்து வத்த பாதை கூழாங்கற்களாலும் கருவேல மரத்தின் முற்களாலும் நிரம்பியது என்பது எல்லாம் முடிந்து அமைதியான பிறகே எனக்கு தெரியும். அந்த அவசர ஒட்டத்தில் நான் அதை கவனிக்கவும் இல்லை, சிறிதளவு வலியும் தெரியவில்லை.
எனக்கு முன்பு ஓடிய ராஜா என்னை அழைத்து செல்வதற்க்காக நின்றான். நான் மேற்கு நோக்கிய சாலையை அடைந்தபோது சற்றே திரும்பி பார்த்தேன் 5 மீட்டர் தொலைவில் என்னை நோக்கி நீரின் ஆக்ரோசத்தினால் இழுத்து வரும் கட்டுமரம் ஒன்று வேகமாக வந்துக் கொன்டிருந்தது. சற்றே சுதாரித்த நான் மேல் நோக்கி குதித்தேன். கண் இமைக்கும் நேரம்தான் ஆயிற்று நான் கீழே விழும்போது கட்டுமரத்தின் மேலே நின்றேன். வந்த வேகத்தில் ஒரு வேலை இடித்திருந்தால் என்னை நசுக்கி இருக்கும் அந்த நானுறு கிலோ எடையுள்ள கட்டுமரம். “ இறங்கி ஒடி வா… ஓடி வா….“ என்ற ராஜாவின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏனென்றால் பல ஆண்டுகளாக மீன்பிடி தொழிலின் நுனுக்கங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ராஜாவுக்கு ஒரு விசயம் நன்றாகவே தெரியும் அது ‘ மேடுபள்ளங்களில் முட்டி மோதி செல்லும் கட்டுமரத்திலிருந்து கீழே விழுந்தால் நான் கருவேல மரத்தின் முட்களுக்கு இறையாவேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை ‘ என்பது. கட்டு மரத்திலிருந்து குதித்து மீன்டும் தொடை அளவு நீரில் ஓடினேன். முக்கால் கிலோமீட்டர் தொலைவு ஓட்டத்திற்கு பின் நீருக்கு முன் சென்று ஓய்வெடுத்தேன். தம்பியும் வந்துவிட்டான். இவை அனைத்தும் மூன்று நிமிட இடைவெளியில் நடந்து முடிந்தது.

சற்று நேரத்தில் நீர் கடலை நேக்கி வழிந்தோட ஆரம்பித்தது. ஆனால் வந்த வேகத்தில் சற்றும் குறையவில்லை திரும்பி செல்லும் போதும். நீர் ஓரளவு வழிந்தோடிவிட்டது. எல்லாம் முடிந்து அமைதியானது. இனி எந்த பிரச்சனையும் இல்லை என முலுமையாக நம்பினோம். உடனே குடும்பத்தினருக்கும், நன்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என்ன ஆனது என பார்க்க மீன்டும் வந்த பாதையிலேயே வழிந்தோடும் நீரை தொடர்ந்து நாங்களும் ஓடினோம். வழியில் பார்த்த சித்தப்பா “எல்லாரும் நல்லா இருக்காங்க, நான் போய் அவங்கள பாக்கரேன் நீங்க இரண்டு பேரும் போய் போட் (BOAT) எப்படி இருக்குனு பாருங்க” என்று சொன்னார்.
என்னதான் பள்ளியில் படித்துக்கொண்டு விடுமுறை நாட்களில் மட்டும் மீன்பிடிக்க சென்றாலும் ஒன்பது வயது முதல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளேன் அந்த வகையில் நானும் ஒரு மீனவனே. புயல் அடித்தாலும் பலத்த காற்று வீசினாலும், கனமழை பெய்தாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தனது படகை கவனித்தே ஆகவேண்டும் என்ற மீனவனின் தலை எழுத்திற்கு நான் மட்டும் விதிவிலக்கு ஆக முடியுமா என்ன?? மீண்டும் இருவரும் விசைபடகு இருக்கும் இடத்தை நேக்கி ஓட தொடங்கினோம்.
காவிரி ஆறும் வங்க கடலலும் முத்தமிடும் அழகே உருவான முகத்துவாரத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஆற்றின் ஒரமாக வரிசையாக கட்டபட்டிருந்தது எங்கள் ஊரை சேர்ந்த அனைத்து விசை படகுகளும். [ காவிரி ஆறு இரண்டாவதாக பெரிய அளவில் கடலில் கலப்பது திருமுல்லைவாசலில் தான் ] நாங்கள் அந்த இடத்தை சென்றடைந்த போது படகின் முன் பகுதியில் கட்டப்பட்டிருந்த அனைத்து கயிறும் அறுந்து பின் பகுதியில் இடபட்டிருந்த நங்கூரத்தின் பிடிப்பில் ஆற்றின் நடு பகுதியில் மிதந்து கொண்டிருந்தது.
வேறு வழியில்லை நீந்தி சென்றுதான் படகை அடையவேண்டும். அதற்கும் தயாரானோம். வழிந்து கடலுக்கு சென்றுக்கொண்டிருக்கும் நீரை எதிர்த்துக் கொண்டு கழுத்தளவு நீர் வரை நடந்து சென்றோம். பிறகு நீந்தி செல்ல தொடங்கினோம். 8 நிமிட நீச்சலுக்கு பிறகு படகை சென்றடைந்தோம். படகு சேதமடைந்திருந்ததால் மற்ற படகுகளிலிருந்து தனியே அப்புறபடுத்த முயற்சித்தோம். அதற்கு படகின் இயந்திரத்தை [Engine] துவக்க [Start] வேண்டும். ஆனால் அந்த இயந்திரத்தை குறைந்த பட்சம் மூன்று பேர் கொண்டு சுற்றினால் தான் துவக்க முடியும். எனினும் நாங்கள் இருவரும் முயற்சித்து பார்த்தோம் முதல் முயற்சி தோல்வியுற்றது. இரண்டாவது முறை முயற்சித்தோம் இயந்திரத்தின் சங்கிலி [Engine jain] கழன்று விழுந்தது. அதை சரி செய்து மீண்டும் மூன்றாவது முறை முழு பலத்தையும் கொடுத்து சுற்றினோம் ஆனால் பலனில்லை. காலையில் தயாராக இருந்த உணவையும் உண்ணாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்ததாலும், விசை படகு இயந்திரத்தை சுற்றி களைத்து போனதாலும் சற்றே ஓய்வெடுக்க அமர்ந்தோம்.
நாங்கள் விட்டாலும் கடல் எங்களை விடுவதாக இல்லை. அது தொடர்ந்து துரத்த வேண்டும் என்ற முடிவுடன் இருந்தது. சற்று நேரத்தில் கடலின் முகத்துவாரத்திற்கு அருகே கொந்தளிப்பு ஏற்பட்டதை கவனித்தேன். ஒரு சில வினாடிகளில் அடுத்த ஆழிப்பேரலை உருவானது. இதை பார்த்த நாங்கள் வேகமாக மீண்டும் இயந்திரத்தை துவக்க முயற்சித்தோம் இந்த முறை வெற்றி கண்டோம். காரணம் மரண பயம்.
உடனே எங்கள் விசைபடகை ஆற்றினுள் வேகமாக செலுத்தினோம். சற்று தொலைவு சென்று எதிர்புறமாக திருப்பி வேகமாக வரும் நீரை எங்கள் விசைபடகை கொண்டு எதிர்த்து நின்றோம். நீர் ஆற்றினுள் வருவதால் உயரமாக வரவில்லை வேகம் மட்டுமே இருந்தது. [ இந்த பேரலைக்கும் உயிர் சேதத்திற்கு பஞ்சமில்லை. ஏனென்றால் முதல் அலையில் தப்பித்து தனது உடைமைகளையும், பொருளையும், பணத்தையும் எடுக்க சென்ற பலரும் இரண்டாவது அலையின் தாக்கத்தால் வீட்டினுள்ளேயே இறந்தனர். ] இரண்டாவது அலையின் நீர் வழிந்தோடியபோது படகை திருப்பி மீண்டும் எதிர் திசையில் செலுத்தினோம். அடுத்த ஒரு சில நிமிடங்களில் மூன்றாவது போரலை வந்தது. இது முதல் பேரலையின் சீற்றத்திற்கு சற்றும் குறைவில்லாத ஆக்ரோசத்துடன் வந்தது. மீண்டும் படகை எதிர் திசையில் செலுத்தினோம். நீரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் படகின் முழு வேகத்தினையும் கொண்டு செலுத்தினோம். ஆனால் நீரின் வேகத்தை தாக்குபிடிக்க முடியவில்லை. முழு வேகத்துடன் இயங்கி கொண்டிருந்த எங்கள் படகு பின் நோக்கி நகர ஆரம்பித்தது. மனதில் பயமும் அதிகரித்தது. இப்படியே தொடர்ந்த நிலையில் 2 நிமிடத்திற்கு பிறகு நீரின் வேகம் குறைந்ததால் பின் நோக்கி செல்வது நின்று பின்னர் முன்னோக்கி சிறிது சிறிதாக முன்னேறியது. சற்று நேரத்தில் நீரின் வேகம் நின்று கடலுக்கு திரும்பி சென்றது. மேலும் இரண்டு வீரியம் குறைந்த பேரலைகளை எதிர்கொண்டோம் மணி பதினொன்று ஆயிற்று. மேலும் அலைகள் வரலாம் என இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தோம் எல்லாம் அமைதியாக இருந்தது. உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் படகை பாதுகாப்பாக கட்டிவிட்டு வீட்டை நோக்கி நடந்தோம்.

அப்போதுதான் ஆழிப்பேரலையின் பாதிப்பு என்னவென்று எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் வந்து பார்த்த போது எங்கள் தெருக்கள் களவு போயிருந்தது. எங்கு பார்த்தாலும் மனித சடலங்கள். ஆங்காங்கே சில வீடுகள் மட்டுமே இருந்தன. மற்றவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. திரும்பிய திசையெல்லாம் வழிகளாகவே இருந்தது. வீட்டிற்கு சென்றேன் வாசலில் 8 வயது குழந்தையும் ஒரு பாட்டியும் பிணமாக கிடந்தார்கள்.பிணங்கள் எல்லாம் வரிசையாக அடுக்கப்பட்டன.


நோய் பரவும் ஆபத்து உள்ளதால் கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். நாங்கள் உறவினர்களோடு நன்பர் ஒருவரின் வீட்டில் சென்று தங்கினோம். அந்த ஆழிப்பேரலைக்கு அடுத்த 5 நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். என் கிராம மக்களில் பலரை பிச்சைகாரர்களாக பார்த்த நாட்கள் அது. பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவினார்கள். அவர்களிடம் உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு பள்ளிகளிலும் திருமண மண்டபங்களிலும் தங்கியிருந்தனர்.
இந்த நாட்களில் கிராமத்தில் யாரும் இல்லாததால் சில நயவஞ்சகர்கள் மிச்சம் மீதி இருக்கும் வீடுகளில் களவாடி சென்றார்கள். மீனவர்கள் உழைக்க தெரிந்தவர்கள், பணம் சம்பாதிக்க தெரிந்தவர்கள், ஆனால் சேமிக்க தெரியாதவர்கள், அன்றாட சந்தோசத்திற்காக அதிக செலவு செய்பவர்கள், வங்கியில் கணக்கு வைக்காமல் வீட்டிலேயே வைத்திருப்பவர்கள் என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
ஆழிப்பேரலையே நீ ஒரு வீரன்.
எதற்கும் துனிந்து நிற்கும் மீனவ
மக்களை புற முதுகு காட்டி
ஓட வைத்த வீரன்.
ஆனால் நான் ஒப்புகொள்ளமாட்டேன். மறைந்திருந்து திடீரென தாக்கினால் பூனை கூட புலியை வெல்ல முடியும். அது வீரனுக்கு அழகல்ல. நான் உன்னை பூனையாகவே பார்க்கிறேன்.
அடுத்த முறை வந்தால் எச்சரித்து வா. உன்னை எதிர் கொல்ல நாங்கள் தயாராக இருப்போம்.

- மு.வள்ளல்ராஜ்

Comments

Popular posts from this blog

Theemithi Thiruvizha

எனக்கு பிடித்த சில பாடல்களும் அதன் விளக்கமும்

பெண்ணியமாம் வெங்காயம் - 1